'நிலக்கரி எடுப்பதை அரசு அனுமதிக்காது' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
இதுகுறித்து நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிப்பார்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பழுப்பு நிலக்கரி எடுப்பதை தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், தாட்கோ தலைவர் மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டி.ஆ.ர்பி ராஜா, மாரிமுத்து, மாவட்ட ஊராட்சிகுழுதலைவர் தலையாமங்கலம் பாலு மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன் பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் நிலக்கரி எடுப்பதற்கு மத்திய அறிவிப்பு அரசு வெளியிட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. இதுகுறித்து நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிப்பார்’ என்று தெரிவித்தார்.