சென்னை: ‘கோவளம் கடற்கரையில் புதைத்துவிட்டேன்’ - கணவர் கொலையில் சிக்கிய மனைவி

சென்னை: ‘கோவளம் கடற்கரையில் புதைத்துவிட்டேன்’ - கணவர் கொலையில் சிக்கிய மனைவி
சென்னை:  ‘கோவளம் கடற்கரையில் புதைத்துவிட்டேன்’ - கணவர் கொலையில் சிக்கிய மனைவி

சென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி கோவளம் கடற்கரையில் மனைவியே புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர், சென்னை நங்கநல்லூர் என்.ஜி.ஓ காலனியில் வசிக்கும் தனது அக்காவும், வழக்கறிஞருமான ஜெயக்கிருபா வீட்டில் தங்கி சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 18 ஆம் தேதி ஜெயந்தன் தனது அக்காவிடம் வேலைக்கு செல்வதாகவும், மாலையில் விழுப்புரத்துக்குச் சென்று, தங்கிவிட்டு வருவதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளார். 

இதன் பின்னர் 10 நாட்களுக்கு மேல் ஆகியும் ஜெயந்தன் திரும்பி வரவில்லை. இதில் சந்தேகமடைந்த வழக்கறிஞர் ஜெயக்கிருபா கடந்த 1 ஆம் தேதி தம்பிக்கு போன் செய்தபோது அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கிருபா விழுப்புரத்தில் உள்ள தனது தந்தையை தொடர்பு கொண்டு கேட்டபோது ‘ஜெயந்தன் ஊருக்கு வரவில்லை’ என, கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே கிருபா காணாமல்போன தனது தம்பி ஜெயந்தனை கண்டுபிடித்து தருமாறு சென்னை நங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தனின் செல்போன் எண்ணை ஆராய்ந்து விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது ஜெயந்தன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலவாயல் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் புதுக்கோட்டைக்கு விரைந்து சென்று பாக்கியலட்சுமியை பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.அதாவது ஜெயந்தன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தாம்பரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது பாலியல் தொழில் செய்து வரும் பாக்கியலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதன் பிறகு ஜெயந்தன் கடந்த 2020 ஆம் ஆண்டு பாக்கியலட்சுமியை விழுப்புரத்தில் உள்ள மயிலம் கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் பாக்கியலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாக்கியலட்சுமி ஜெயந்தனை விட்டுப் பிரிந்து தன்னுடைய சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி பணிக்கு சென்ற ஜெயந்தன் பணிமுடிந்து மறுநாள் (19ம் தேதி) தனது மனைவி பாக்கியலட்சுமியை சந்திக்க புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் சந்தோஷமாக இருந்த நேரத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாக்கியலட்சுமி தனது ஆண் நண்பர் சங்கர் என்பவருடன் சேர்ந்து ஜெயந்தனை அடித்துக் கொலை செய்துள்ளார். 

பின்னர் அவருடைய கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவரில் சுருட்டி கட்டைப்பையில் வைத்துக்கொண்டு கடந்த 20ம் தேதி அதிகாலை பேருந்து மூலம் சென்னை கோவளம் கடற்கரைக்கு வந்து புதைத்துவிட்டு மீண்டும் புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். 

இதன் பிறகு கடந்த 26 ஆம் தேதி தலை மற்றும் வயிற்றுப் பகுதியை வெட்டி பிளாஸ்டிக் கவரில் சுருட்டி சூட்கேசில் வைத்துக்கொண்டு வாடகை காரில் சென்னை கோவளத்துக்கு வந்துள்ளார். பின்னர் தனக்கு பழக்கமான கோவளம் பகுதியை சேர்ந்த பூசாரி வேல்முருகன் என்பவரின் உதவியுடன் ஜெயந்தனின் மற்ற உடல் பாகங்களை புதைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பாக்கியலட்சுமி மற்றும் அவரது ஆண் நண்பர் சங்கர் மற்றும் பூசாரி வேல்முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஜெயந்தனின் உடலை தோண்டி எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விமான நிலைய ஊழியர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கோவளம் கடற்கரையில் புதைக்கப்பட்ட  சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com