இருதரப்பும் கடும் வாக்குவாதத்தின்போது கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாமில் தி.மு.க மாவட்ட கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
மேலும்,இந்த முகாமில் காது, மூக்கு, தொண்டை, வயிறு, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் இருதய நோய், கருப்பை வாய் புற்றுநோய், பால்வினை நோய், எலும்பு மூட்டு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் சித்த மருத்துவ சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் மற்றும் தி.மு.க முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர்.
அப்போது, வெலக்கல்நாத்தம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஜெயசுந்தரேசனும் கலந்து கொண்டார். இந்த நிலையில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஜெயசுந்தரேசன் இருவருக்கும் இடையே நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் டெண்டர் எடுப்பதில் பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக, இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் சுந்தரேசனுடைய மகனான வேல்முருகன் என்பவர் எனது அப்பாவை எவ்வாறு தகாத வார்த்தையில் பேசலாம்? என கூறி மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் சூரிய குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் பெறும் சலசலப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.