நெல்லை: ‘இறப்புக்கான காரணச் சான்று’ - உயிருடன் இருப்பவருக்கு கடிதம் அனுப்பிய டாக்டர்கள்

நெல்லை: ‘இறப்புக்கான காரணச் சான்று’ - உயிருடன் இருப்பவருக்கு கடிதம் அனுப்பிய டாக்டர்கள்
நெல்லை: ‘இறப்புக்கான காரணச் சான்று’ - உயிருடன் இருப்பவருக்கு கடிதம் அனுப்பிய டாக்டர்கள்

திருநெல்வேலியில் உயிருடன் இருப்பவருக்கு இறப்புக்கான சான்று அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நெல்லை மாவட்டம், டோனாவூர் அருகேயுள்ள செங்களாக்குறிச்சியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (77). இவர், நாசிக்கில் உள்ள ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதன் பிறகு சொந்த ஊரில் தனது மனைவி கல்யாணி மற்றும் மகாலிங்கம், முத்துகுமார் என 2 மகன்களுடன் வசித்து வந்தார். மூத்த மகன் மகாலிங்கம் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டு ஊரில் வசித்து வருகிறார். 

இரண்டாவது மகன் முத்துக்குமார் களக்காட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவசுப்பிரமணியனுக்கு கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக ஜனவரி 21 ஆம் தேதி மதியம் 4 மணி அளவில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜனவரி 29 ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் சிவசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்போது அவரது மகன் மகாலிங்கம் தந்தைக்கு முறையாக மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் பயிற்சி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்ததால் இறந்ததாக குற்றம் சாட்டினார். இதையடுத்து மகாலிங்கத்தை உறவினர்கள் சமாதானப்படுத்தி இறந்த சிவசுப்பிரமணியம் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். 

இறந்த சிவசுப்பிரமணியனுக்கு இறப்பு சான்றிதழும் மருத்துவமனையின் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில் மகாலிங்கம் தனது தந்தை சிவசுப்பிரமணியனின் சிகிச்சை விபரம் குறித்து அறிக்கை தர வேண்டும் என தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு மனு அளித்திருந்தார். அந்த மனு மீது விசாரணை மேற்கொண்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனுவை ஏற்றுக் கொண்டு சிகிச்சை விபரங்களை தெரிவித்துள்ளார். 

அதில் ஜனவரி 21ம் தேதி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த சிவசுப்பிரமணியன் ஜனவரி 26ம் தேதி மதியம் 2 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் சிவசுப்பிரமணியன் ஜனவரி 23 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 29ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு இறந்துவிட்டதாக மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மார்ச்சுவரி ரிப்போர்ட்டில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னுக்குப் பின் முரணான தகவலால் அதிர்ச்சி அடைந்த மகாலிங்கம் இதுகுறித்து நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார், ‘எழுத்து பிழையால் நடந்த தவறு குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது’ என, திருப்பி அனுப்பி உள்ளனர். இதுகுறித்து மகாலிங்கம் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்து தந்தையின் இறப்புக்கான சான்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் இருந்து மகாலிங்கத்திற்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், ‘சிவசுப்பிரமணியன் இறப்பிற்கான காரணச் சான்று’ என குறிப்பிடுவதற்கு பதிலாக ‘மகாலிங்கம் இறப்பிற்கான காரணச் சான்று’ என, மனு அளித்த மகாலிங்கத்திற்கே கடிதம் வந்துள்ளது. இதை பார்த்ததும் மகாலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் ‘உயிருடன் இருக்கும்போதே இறந்ததாக சான்று அனுப்பி உள்ளார்களே’ என மருத்துவமனை நிர்வாகத்தின் செயலை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com