கன்னியாகுமரியில் தன் மீதே ஆசிட் வீசச்சொன்ன பெண்ணின் நாடகம் அம்பலமாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் லதா (46). இவர், சித்திரங்கோடு பகுதியில் சொந்தமாக அரிசி ஆலை நடத்தி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடத்தூர்கோணம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி லதா வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது லதாவை பின் தொடர்ந்து 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள் திடீரென மீது ஆசிட்டை வீசினர். இதன் பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் லதாவின் முகம் உள்ளிட்ட உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டதால் அலறித் துடித்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லதாவை மீட்டு குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்கும் வகையில் குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் அந்த பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது செங்கோடி ஜெஸ்டின் ராபின் (39), ஷாஜின் (23), அர்ஜூன்குமார் (24) மற்றும் ஜென்டின் கிருபதாஸ் (52) ஆகியோர் லதா மீது ஆசிட் வீசியவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
இதன் பின்னர் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், லதா தன் மீது ஆசிட் வீசுமாறு அவர்களுக்கு பணம் கொடுத்து வரவழைத்தது தெரியவந்தது. இதற்காக வீரியம் குறைந்த ஆசிட்டை லதாவே வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனாலும் லதாவின் முகம், கை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் விசாரணையில், லதா பலரிடமும் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை அவர் திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு தானே ஆசிட் ஊற்றிக் கொண்டு கடனை திருப்பிக் கேட்டு தொல்லை கொடுக்கும் நபர்களை மிரட்ட இவ்வாறு செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து லதா சிகிச்சை முடிந்து திரும்பியதும் கைது செய்யப்படலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.