மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை அவையாம்பாள்புரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் விஜயன் (42). இவர், தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அதன் மூலம் எளிதில் தன்னால் அரசு வேலைகள் வாங்கித் தர முடியும் என்றும் கூறிக்கொண்டு பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னப்பன் (51) என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது மகனுக்கு அரசு நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கித் தர வேண்டுமென கூறி விஜயனிடம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் வரை பணம் கொடுத்ததாக தெரிகிறது.
விஜயன் பணத்தை பெற்றுக்கொண்டு 2 ஆண்டுகள் கடந்தும் சொன்னதுபோல் வேலை வாங்கி தராததால் அதிர்ச்சி அடைந்த சின்னப்பன், ‘வேலை வாங்கி தராவிட்டாலும் பரவாயில்லை. கொடுத்த பணத்தை உடனே திரும்பி கொடுங்கள்’ என்று கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் விஜயன் திருப்பி தராமல் சின்னப்பனை அலைய வைத்ததோடு மிரட்டி வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சின்னப்பன் மயிலாடுதுறை போலீசில் இதுதொடர்பாக புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், எஸ்.ஐ முகிலரசன் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி விஜயன் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்தனர். மேலும் இந்த மோசடி வழக்கு தொடர்பாக பூம்புகாரை சேர்ந்த சந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.