நாகர்கோவில்: பா.ஜ.க, காங்கிரஸ் தொண்டர்கள் மோதல் - என்ன நடந்தது?

நாகர்கோவில்: பா.ஜ.க, காங்கிரஸ் தொண்டர்கள் மோதல் - என்ன நடந்தது?
நாகர்கோவில்: பா.ஜ.க,  காங்கிரஸ் தொண்டர்கள் மோதல் - என்ன நடந்தது?

நாகர்கோவிலில் பா.ஜ.க, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் டைசன் தலைமையில் நாகர்கோவில் பா.ஜ.க மாவட்ட அலுவலகம் முன்பாக போராட்டம் நடந்தது. அப்போது அவர்கள், மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் பா.ஜ.க அலுவலகத்தில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றுக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்து அலுவலகத்தில் இருந்த பா.ஜ.க நிர்வாகிகள் வெளியில் வந்து, ‘கட்சி அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தாதீர்கள். வேறு இடத்துக்கு செல்லுங்கள்’ என்று கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர், கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கட்சிக் கொடிகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். மேலும் சாலையோரத்தில் கிடந்த கற்கள், செங்கல் போன்றவற்றை வீசி எறிந்தும் மோதலில் ஈடுபட்டனர். 

இதுதொடர்பாக தகவலறிந்து ஏ.டி.எஸ்.பி ஈஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையே மோதலில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர். மோதல் சம்பவத்தின்போது காங்கிரஸ் கொடிகளை பறித்து பா.ஜ.க-வினர் சாலையில் போட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தகவலறிந்து நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் அங்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் அங்கிருந்து இரு கட்சியினரும் கலைந்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com