டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நற்பவளக்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பழனிசாமி கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை, அறந்தாங்கி, நற்பவளக்குடி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நற்பவளக்குடி கிராமத்தில் 6750 என்ற கடை எண் கொண்ட மதுபான கடையை அரசு திறந்துள்ளது. மேலும் இந்த மதுபானக் கடை தற்போது மாற்றப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் கல்வி நிலையங்கள் செயல்படுகிறது.
இங்கு மது அருந்த வருபவர்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை கல்வி நிலையங்களில் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதி வழியாக சென்று வரக்கூடிய மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த மதுமான கடையை அகற்ற கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் அதனை பரிசீலிக்கவில்லை. எனவே புதுக்கோட்டை, நற்பவளக்குடி கிராமத்தில் மாற்றப்பட்டுள்ள 6750 என்ற கடை எண் கொண்ட டாஸ்மாக் கடையை செயல்பட தடை விதிக்கவும், இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு பழனிசாமி தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கல்வி நிறுவனம் அருகில் புதிய மதுபான கடை எவ்வாறு அமைக்கப்பட்டது?’ என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் ‘கல்வி நிறுவனம் செயல்படாமல் உள்ளது’ என, தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், ‘கல்வி நிறுவனம் அருகில் மதுபான கடை அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா?’ என கேள்வி எழுப்பினர்.
மேலும் ‘பள்ளி, கல்லூரி அருகே டாஸ்மாக் கடைகளை அமைத்தால் மாணவர்கள் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பார்கள். போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு உருவாக்குவோம் என சட்டம் பேசிவிட்டு கல்லூரி அருகில் மதுபான கடைகள் அமைப்பது எப்படி? இதனாலேயே இந்த சமூகம் கெட்டு குட்டிச்சுவர் ஆகி உள்ளது’ என வேதனை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ‘மதுபான கடை அமைப்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம். ஆனால் அதனை உள்ளூர் கிராம மக்கள் எதிர்க்கும்பொழுது அதில், நீதிமன்றம் தலையிட வேண்டி உள்ளது. மதுபான கடை செயல்பட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
புதிய மதுபான கடை உள்ள இடத்தில் கல்வி நிறுவனம் செயல்பாட்டில் உள்ளதா? அங்கு எத்தனை பேர் படித்து வருகின்றனர்? புதிய டாஸ்மாக் அமைய உள்ள இடத்தின் அருகே எத்தனை பள்ளி, கல்லூரி கோயில்கள் உள்ளன என்பது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.