தென்காசி: மண் குவளையில் ' டீ, காபி' - அசத்தும் இளைஞர்
'ஆதரவற்ற குழந்தைகளை' வைத்து கடையைத் திறந்த தென்காசி இளைஞரின் செயல் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது
தமிழகத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில், பேப்பர் கப், கண்ணாடி டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது
இந்நிலையில் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் பட்டதாரி இளைஞரான முத்தமிழ் செல்வன் என்பவர் டீக்கடை திறந்துள்ளார். கடையில் பேப்பர் கப் மற்றும் கண்ணாடி டம்ளருக்கு மாற்றாக புதிய முயற்சியாக உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான மண் குவளையில் டீ வழங்குகிறார். டீக்கடை திறப்பு விழாவிற்கு ஆதவற்ற 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளைத் தனது கடைக்குச் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து தனது கடையில் உள்ள பலகாரங்கள், டீ உள்ளிட்டவைகளை மண் குவளையில் வழங்கியுள்ளார். மண் குவளையில் டீயை சுவைத்த குழந்தைகள் மண்குவளையை ஆசையுடன் எடுத்தும் சென்றனர்.
மண் குவளையில் டீ வழங்கி வருவதோடு ஆதரவற்ற குழந்தைகளைச் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து வந்து டீ கடையைத் திறந்த சம்பவம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.