தினமும் 150 முதல் 200 வரை வழக்குகள் பதிவாகின்றன.
ப்ரீத் அனலைசர் கருவியில் பிரச்னை உள்ளதாக எழுந்த சர்ச்சை குறித்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சரட்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களை குறைக்கும் நோக்கிலும், குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த தீபக் என்பவர் எல்டாம்ஸ் சாலையில் செல்லும் போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரிடம் ப்ரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் தீபக் 45 சதவீதம் குடித்திருப்பதாக காட்டியதால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், ”தனக்கு மதுகுடிக்கும் பழக்கமே இல்லை. வேண்டுமானால் வாருங்கள் மருத்துவமனைக்கு சென்று இரத்த பரிசோதனை செய்வோம் என்று அழைக்கிறார். அதற்கு போலீஸ் தரப்பிலோ, ”அதெல்லாம் வர முடியாது. மிஷின் நீங்கள் குடித்திருப்பதாக காட்டுகிறது” என தெரிவிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தீபக்கிடம் வேறு மிஷின் கொண்டு இரு முறை செய்த சோதனையில் ஜீரோ சதவீதம் ஆல்கஹால் குடித்திருப்பதாக காட்டியது. இதனால், வாகன ஓட்டியான தீபக் அதிருப்தி அடைந்தார்.
இதுகுறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதனால், பாதிக்கப்பட்ட தீபக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களையும் மது குடித்திருப்பதாக மோசடி நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன்” எனத் தெரிவித்து இருந்தார். இச்சம்பவம் சர்ச்சையான நிலையில், போலீசாரின் ப்ரீத் அனலைசர் கருவியின் நம்பகத்தன்மை மீது பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இதுத்தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சரட்கர், ’’இதுபோன்ற சம்பவங்கள் இதுவரை நடந்ததில்லை. இதுகுறித்து விசாரிக்கப்படும்’’ என்றும் கூறினார். மேலும் அவர்,’’விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதில் முக்கிய காரணங்களுள் ஒன்றாக மது உள்ளது. ஆகையால் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் அதிக அளவிலான வாகன தணிக்கைகள் நடத்தப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜனவரி 2022 முதல் கடந்த 15 மாதங்களில் 37 ஆயிரம் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குகளில் சிக்கியவர்களிடம் இருந்து அபராதத் தொகையை பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கையால் 2021ஆம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் 13 சதவீதம் போக்குவரத்து விபத்துகள் குறைந்துள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டை காட்டிலும் இந்த 3 மாதங்களில் 7 முதல் 8 சதவீதம் வரை விபத்துகள் குறைந்துள்ளது. விபத்துகளை தடுக்க காவல்துறை தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுபோன்ற சோதனையின் போது பொதுமக்களுக்கு சில தொந்தரவுகள் இருந்தாலும், நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது.
சமீபத்தில் தேனாம்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவ்வழியாக வந்த நபரிடம் சோதனை செய்ததில் அவர் 45 சதவீதம் குடித்திருப்பதாக முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், வாகன ஓட்டி தான் குடிக்கவில்லை என்றும் தனக்கு குடிக்கும் பழக்கமே இல்லை என சுமார் 15 நிமிடங்கள் வாதம் செய்துள்ளார். இதற்கு பின்னர் மறுபடியும் சோதனை செய்தபோது ஜீரோ சதவீதம் காட்டி இருக்கிறது. இருப்பினும் 3வது முறையாக சோதனையிலும் அதே ஜீரோ சதவீதம் காட்டியுள்ளது. இதனால், போலீசார் வாகன ஓட்டிய நபர் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யாமல் அனுப்பி உள்ளனர். வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தவறான செய்திகள் வந்துள்ளன. ஆனால், அவருக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படவில்லை. முதலில் செய்த மிஷினில் பிரச்னை இருந்ததால் வேறு மிஷினில் குடித்திருக்கிறாரா? என சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. முதலில் சோதனை செய்த மிஷினில் தான் மேலும் இருமுறையும் சோதனையும் செய்யப்பட்டது.
அன்று இரவு 70 பேரிடம் சோதனை செய்த போலீசார் 67 பேர் மது அருந்தவில்லை என மிஷின் காட்டியுள்ளது. மேலும் மது குடித்துவிட்டு வந்த மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இருவரும் மது அருந்தி இருந்ததை உறுதி செய்துள்ளனர். அந்த குறிப்பிட்ட நபருக்கு மட்டும் குடித்திருப்பதாக காட்டியுள்ளது. அந்த மிஷினை தற்போது பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளோம். அந்த மிஷினை விற்கும் நிறுவனமும், காவல்துறையும் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம்.
தினமும் 10 ஆயிரம் பேரிடம் சோதனை செய்கிறோம். இதுபோன்ற பிரச்னை எழுந்ததில்லை. தினமும் 150 முதல் 200 வரை வழக்குகள் பதிவாகின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் குறைவான எண்ணிக்கையிலான போலீசாரை வைத்து போக்குவரத்து சரிசெய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக காவல்துறை பாரம்பரியமும், மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டதாக உள்ளது’’ என தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு அளித்துள்ள விளக்கத்தில், ’’இரவு நேர சோதனையில் இலக்கு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்டறிய நவீன கருவி வழங்கப்படுகிறது. இயந்திரத்தின் பயன்பாடு குறித்து ஆராயப்படும். இயந்திரத்தில் தவறு இருந்தால், புதிய இயந்திரம் மாற்றப்படும்’’ என தெரிவித்துள்ளார்.