சென்னை: 106 ஏக்கர் நிலம்; ரூ.730 கோடி பாக்கி - கிண்டி ரேஸ் கிளப்புக்கு கெடு

சென்னை: 106 ஏக்கர் நிலம்; ரூ.730 கோடி பாக்கி - கிண்டி ரேஸ் கிளப்புக்கு கெடு
சென்னை: 106 ஏக்கர் நிலம்; ரூ.730 கோடி பாக்கி - கிண்டி ரேஸ் கிளப்புக்கு கெடு

அரசு நிலங்களின் குத்தகையை உயர்த்துவது என்பது அரசின் கொள்கை முடிவு

அரசுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்துக்குச் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்தும்படி, சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை ரேஸ் கிளப்புக்கு கடந்த 1946ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகையாகக் கொடுக்கப்பட்டது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு என அந்த இடத்திற்கு வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 1970ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல், அந்த இடத்திற்கு வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மாம்பலம் - சென்னை கிண்டி தாசில்தார், ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், 1946ம் ஆண்டு ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்த பிரிவு ஏதும் இல்லை என இந்த நோட்டீசுக்கு பதிலளித்த ரேஸ் கிளப் சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளக்கத்தை நிராகரித்த தமிழக அரசு, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கி செலுத்தும்படி ரேஸ் கிளப்புக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்துச் சென்னை ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 'சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அரசுக்குச் சென்னை ரேஸ் கிளப் நிறுவனம் செலுத்த வேண்டிய வாடகை பாக்கியான 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்த சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். தவறினால், மனுதாரரை காவல் துறையினர் உதவியுடன் வெளியேற்றிவிட்டு, நிலத்தை அரசு எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும்' உத்தரவிட்டார்.

'சுதந்திரத்துக்கு முன்னர் மேற்கொண்ட குத்தகை என்பதால், அலரசு இந்த விவகாரத்தை மறுஆய்வு செய்திருக்கவேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, 2004ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட வாடகை பாக்கி 12 ஆயிரத்து 381 கோடியே 35 லட்சத்து 24 ஆயிரத்து 269 ரூபாயை 2 மாதங்களில் செலுத்த கூறி ஒரு மாதத்தில் நோட்டீஸ் அனுப்பவும்' அரசுக்கு உத்தரவிட்டார்.

'ஒரு சில பணக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில் தற்போது நடைபெறும் செயல்களில் எந்தப் பொது நலனும் இல்லை என்றும், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தை மீட்டு மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாம்' என்றும் அரசுக்கு நீதிபதி யோசனை தெரிவித்தார்.

'அரசு நிலங்களின் குத்தகையை உயர்த்துவது என்பது அரசின் கொள்கைமுடிவு' எனத் தெரிவித்த நீதிபதி, 'அதை முறையற்றது என்றோ, சட்டவிரோதமானது என்றோ கூறமுடியாது' என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும், 'பொதுநலனை உறுதி செய்யும் வகையிலும், அரசு வருவாயை காக்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com