காவல்துறையினரால் சுடப்பட்ட சஞ்சய் ராஜாவுக்கு சிகிச்சை குறித்து தெளிவில்லாத ஆவணத்தை ஆய்வாளர் தாக்கல் செய்ததாக புகார்
காவல்துறையினரால் சுடப்பட்ட சஞ்சய் ராஜாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தெளிவில்லாத ஆவணத்தை ஆய்வாளர் தாக்கல் செய்த விவகாரத்தில், கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மதுரையைச் சேர்ந்த சத்தி பாண்டி என்ற ரவுடியை சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னையில் சரணடைந்த கோவையைச் சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீஸார் அழைத்துச் சென்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாஸாரை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில், தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் சஞ்சய் ராஜாவின் காலில் குண்டடிபட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்தவும், உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டும் எனச் சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சஞ்சய் ராஜாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துக் கோவை ரேஸ்கோர்ஸ் ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணம் தெளிவாக இல்லாத காரணத்தால், கோவை காவல் ஆணையர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அந்த உத்தரவின் பேரில், கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம், ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'ஆய்வாளர் தாக்கல் செய்த ஆவணத்தைத் தான் பார்த்ததாகவும், இனி இதுபோன்ற செயல் நடைபெறாது' என உறுதி அளித்தார் ஆணையர் பாலகிருஷ்ணன்.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடலூர் சிறைக்குச் சென்று சஞ்சய் ராஜாவை பார்த்ததாகவும், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ், முறையான சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து தற்போது வழங்கப்படும் சிகிச்சையைத் தொடர உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.