ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
ஆலங்காயம் அருகே சித்தப்பாவை கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நாடகமாடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த படகுப்பம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (65), இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொர்டர்ந்து சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர்.
பிரேதப் பரிசோதனையின் அறிக்கையில் கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது.இதை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உதயகுமாரின் மூத்த சகோதரரான சிவக்குமாருக்கும், உதயகுமாருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் இருவருக்குள்ளும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் சிவகுமாருக்கும் உதயகுமாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு ஆத்திரமடைந்த சிவகுமாரின் மகன் மணிகண்டன் (33) உதயகுமாரை தாக்கியதில் உதயகுமார் உயிரிழந்துள்ளார். இதை அறிந்த மணிகண்டன், உதயகுமாரை டிராக்டரில் அமர வைத்து, டிராக்டரை கீழே தள்ளிவிட்டு, விபத்து ஏற்பட்டு உதயகுமார் இறந்தது போலச் சித்தரித்து நாடகமாடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்த ஆலங்காயம் போலீசார் வழக்கில் தொடர்புடைய மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.