லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
குமரி மாவட்ட களியல் கிராம நிர்வாக அலுவலர் மரம் வெட்டுவதற்காக அனுமதி வழங்க லஞ்சம் வாங்கும்போது, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கடையல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்துகாணி பகுதியை சார்ந்த பிரேன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட களியல் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்து அனுமதி கோரியுள்ளார். முதலில் கிராம நிர்வாக அலுவலர் முத்து அனுமதி வழங்க இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மரத்தை வெட்ட அனுமதி அளிக்க 3000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரேன் குமரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி விக்டர் தர்மராஜ் தலைமையிலான அதிகாரிகளின் ஆலோசனைப்படி, இன்று பிரேன் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்து கிராம நிர்வாக அலுவலரிடம் 2000 ரூபாய் அளித்துள்ளார். அதே நேரத்தில் அவருடன் மாறு வேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் முத்து என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இவர் பல வருடங்களாக களியல் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். எதற்கு எடுத்தாலும் லஞ்சம் வாங்குபவர் என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.