குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்
திருநெல்வேலி மாவட்டத்தில் வெங்கடேசன் என்பவரை கொலை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 3 பேரின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி பல்விந்தர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெங்கடேசன் என்பவரை கொலை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக 3 பேர் அழைத்துவரப்பட்டனர். அப்போது அவர்களின் பற்களை பிடுங்கியதாக ஏ.எஸ்.பி பல்விந்தர் சிங் மீது புகார் எழுந்தது.
மேலும், வாயில் காட்டுமிராண்டித்தனமாக லத்தியால் தாக்கியதாகவும், சமீபத்தில் ஒருவருக்குத் திருமணம் நடந்ததாகக் கூறியபோது, அவரை பாலியல் ரீதியாக மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
மேலும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நீதிவிசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே புகாரில் சிக்கிய ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றித் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. மேலும், இந்தப் புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை பிரிவு ஐ.ஜி. 6 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் நெல்லை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் குறித்து அ.தி.மு.கவைச் சேர்ந்த அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்குப் பதில் அளித்த பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'திருநெல்வேலியில் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய புகார் எதிரொலியாக ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றும், 'குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.