சி.சி.டி.வி பதிவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதாக கூறிச் சென்ற பெண் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பண்டாரவாடை கரை மேட்டுத்தெருவில் வசித்து வந்த சீனிவாசன் என்பவரின் மனைவி செல்வமணி. 55 வயதான இவர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். கணவன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மகன் வெளிநாட்டிலும், மகள் திருமணம் ஆகி அதே பகுதியிலும் வசித்து வருகின்றனர்.
கடந்த 24ம் தேதி செல்வமணி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதாக கூறி உள்ளார். இந்த நிலையில், செல்வமணி மகள் ராஜலட்சுமி நேற்று 28ம் தேதி மாலை அம்மாவை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பூட்டப்பட்டு இருந்த வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பித்தளை குவளைக்குள் செல்வமணியின் முகத்தை அமுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
செல்வமணியை கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டி சென்றவர்கள் யார்? தனிமையில் இருந்த பெண்ணை கொலை செய்ய காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் பாபநாசம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடைசியாக செல்வமணி வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி பதிவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.