மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தையை கடத்தி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு அருகே மூதாட்டி ஒருவர் கையில் குழந்தையுடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது வார்டில் இருந்த செவிலியர்கள் ‘குழந்தையின் தாயார் யார்?’ என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் காவல் துறையினருக்கு அளித்த தகவலையடுத்து போலீசார் விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்தியபோது மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டிச் சேர்ந்த பாண்டியம்மாள் (60) என்பது தெரிய வந்துள்ளது.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அன்னமார்பட்டி பகுதியை சேர்ந்த மாலதி என்ற பெண் பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தையை கொடுத்து விற்பனை செய்தால், அந்த பணத்தை இருவரும் பிரித்து எடுத்துக்கொள்ளலாம் என கூறியதாகவும், கடந்த 25 ஆம் தேதியன்று ஆனையூர் பகுதிக்கு ஆட்டோவில் வந்து பச்சிளம் குழந்தையை கொடுத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தானும், தனது மகள் அழகு பாண்டியம்மாள் ஆகிய இருவரும் குழந்தைக்கு பால் கொடுத்து பராமரித்து வந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து குழந்தையை கடத்தி வைத்திருந்த பாண்டியம்மாள் (60), அவரது மகள் அழகு பாண்டியம்மாள் மற்றும் பாண்டியம்மாளின் உறவினர் மேலும் ஒரு பாண்டியம்மாள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் மாலதி, குழந்தையின் தாயார் ஆகிய 2 பேர் மீது ராஜாஜி அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேர் அளித்த தகவலின் அடிப்படையில் குழந்தையை விற்பனை செய்ய கொடுத்ததாக கூறப்படும் மாலதி என்ற பெண் செவிலியரா? அல்லது சத்துணவு பணியாளரா? என்கிற கோணத்திலும் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையின் தாயார் யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.