இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கல்லூரி வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 மாணவிகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 20க்கும் மேற்பட்டவர்கள் கன்னியாகுமரிக்கு கல்லூரி வாகனத்தில் சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கல்லூரி வாகனத்தை ஓட்டுநர் முனுசாமி ஓட்டி வந்தார். நெல்லை டி.வி.எஸ் நகர் நான்கு வழிச்சாலை அருகே வரும்போது ரயில் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு குஜராத் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் டீசல் இல்லாமல் நின்றுவிட்டது. விளக்கையும் டிரைவர் போடாமல் சென்று விட்டதாக தெரிகிறது.
இதனை அறியாமல் வந்த ஓட்டுநர் முனுசாமி லாரியின் பின்னால் கல்லூரி வாகனத்தை மோதியதால் விபத்து ஏற்பட்டது. கல்லூரி வாகனத்தில் வந்த மாணவிகள் அலறி துடித்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஓட்டுனர் முனுசாமி கிளீனர் வீரசெல்வம், மாணவிகள் அன்னை தெரசா, ரஞ்சிதா, சசிகலா, பொன்மலர், சாந்தி உட்பட 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரியில் டீசல் கூட இல்லாமல் நான்கு வழிச்சாலையில் எந்தவித ஒளிரும் விளக்கு கூட போடாமல் விபத்து ஏற்படுத்திய சம்பவம் கவனக்குறைவாக இருந்ததை காட்டுவதாக உள்ளது.