திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நள்ளிரவில் கமாண்டோ படையினர் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்
திவ்ய தேசம் எனப்படும் 108 வைணவ திருத்தலங்களில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முதன்மையானதாக விளங்கி வருகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி பெருவிழா, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் மிகவும் விமரிசையாக நடைபெறும். இந்நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரங்கநாதரை வழிபட்டு செல்வார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் வழக்கம்போல் வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இங்கு உள்ள பூ மார்க்கெட் உலகப்புகழ் பெற்றது என்பதால் வழக்கம்போல வியாபாரிகள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அதிகாலை 1 மணி அளவில் கோயில் அருகே சைரன் சத்தத்துடன் வாகனங்கள் மின்னல் வேகத்தில் வந்துள்ளன. அப்பகுதி மக்கள் வீட்டிற்கு வெளியில் ஓடி வந்து பார்த்தபோது ராஜகோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம், வடக்கு வாசல், வெள்ளை கோபுர வாசல் ஆகிய இடங்களில் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் வந்து நின்றன.
அவற்றில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கருப்பு உடை அணிந்த கமாண்டோ படை வீரர்கள் கைகளில் துப்பாக்கிகளுடன் இறங்கி, கோயிலின் கதவுகளை இடித்து தள்ளியவாறு உள்ளே புகுந்தனர். இதனைப் பார்த்துக் கொண்டு இருந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் 1 மணி நேரம் கழித்து விசாரித்தபோதுதான் கோயிலில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதும், பாதுகாப்பு ஒத்திகை என்பதும் தெரிய வந்தது.
இந்த பாதுகாப்பு ஒத்திகை அதிகாலை 1.30 மணியில் இருந்து 2.30 மணி வரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா முன்னிலையில் நடைபெற்றது. கோயிலுக்குள் பயங்கரவாதிகள் திடீரென புகுந்துவிட்டால் அவர்களை எப்படி எதிர்கொண்டு பக்தர்களை காப்பாற்றுவது? என கமாண்டோ படையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
முதலில், கிழக்கு வாசல் வழியாக தமிழக கமாண்டோ படை வீரர்கள் 42 பேர் கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர், வடக்கு வாசல் வழியாக தேசிய பாதுகாப்பு படையினர் 142 பேர் அதிரடியாக கோயிலுக்குள் புகுந்து நாலாப்புறமும் சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினரும் இடம்பெற்று இருந்தனர்.