சேலம் சகாதேவபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 ஆண்டுகள் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் சகாதேவபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய வளாகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ‘10 குழந்தைகள் உள்ள அங்கன்வாடி மையங்களை மினி மையமாக்குவது மற்றும் 5 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
ஒரு ஊழியர் இரண்டு அல்லது மூன்று மையங்களுக்கு பொறுப்பாளராக இருக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும். மினி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் 10 ஆண்டுகள் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கோஷம் எழுப்பினர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அங்கன்வாடி ஊழியர்கள் ‘தற்போது குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் அவர்களின் நலன் கருதியும், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டும் ஒருமாத காலம் கோடை விடுமுறை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.