வாணியம்பாடி அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய கண்ணாடியைச் சேதப்படுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து மைசூர் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் இன்று காலை 8:15 மணி அளவில் காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி வழியாக மைசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென எஸ்- 14 கோச் என்ற பெட்டியின் கண்ணாடி உடைந்துள்ளது.
இதனால், அதிர்ந்த ரயில் பயணிகள் இதுகுறித்து ரயில் ஓட்டுநர் மற்றும் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் அளித்துள்ளனர். வந்தே பாரத் ரயில் ஓட்டுநர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இது குறித்து புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது வாணியம்பாடி, புதூரை அடுத்த திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் (வயது 21) என்பவர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே மது அருந்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மது அருந்திக் கொண்டிருந்த அந்த இளைஞரே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியது விசாரணையில் தெரியவந்தது. அவர் மதுபோதையில் வந்தே பாரத் ரயில் மீது கல்லை வீசியது ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.