திருவள்ளூர்: அரியவகை உடல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் - முதலமைச்சருக்கு பெற்றோர் கோரிக்கை

திருவள்ளூர்: அரியவகை உடல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் - முதலமைச்சருக்கு பெற்றோர் கோரிக்கை
திருவள்ளூர்: அரியவகை உடல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் - முதலமைச்சருக்கு பெற்றோர் கோரிக்கை

மூடிய காதுகளால் கேட்கும் திறன் மட்டும் மிகவும் குறைவாக இருந்துள்ளது.

திருவள்ளூர், அருகே அரிய வகை உடல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு உதவிட சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவேற்காடு, நடேசன் நகரில் வசித்து வருபவர்கள் தினேஷ்-தீபிகா தம்பதி. இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற 7 வயது மகளும், கவின் என்ற 4 வயது மகனும் உள்ளனர். 4 வயது மகன் கவின் அரிய வகை உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். 
மகன் கவின் பிறந்தபோது, அளவில்லாத மகிழ்ச்சி அடைந்த தினேஷ் தம்பதியினர் பிறக்கும்போதே குழந்தையின் இரு காதுகளும் மூடிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தப் பிரச்சனை என்பது அரிதினும், அரிதான ஒன்று என்று கூறிய மருத்துவர்கள், இதற்கு சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளனர். ஆனால், குழந்தை வளர வளர, மற்ற குழந்தைகளைப்போல இயல்பாகவே இருந்துள்ளான். மூடிய காதுகளால் கேட்கும் திறன் மட்டும் மிகவும் குறைவாக இருந்துள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கூலிக்கு வேலை செய்யும் தினேஷால் தனது மகன் கவினுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்க முடியாத நிலை. நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், தற்போது கவினுக்கு 4 வயதாகிறது. அதாவது பள்ளிக்கு செல்ல தொடங்கும் வயது. ஆனால், காதுகள் மூடிய நிலையில் பிறந்த கவினை மற்ற மாணவர்கள் ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சம் தினேசுக்கு எழவே, மற்ற குழந்தையை போல கவினை மாற்ற வேண்டும், அவனுக்கு ஏற்பட்டுள்ள கேட்கும் திறன் குறைபாட்டை போக்க வேண்டும் என்று பல மருத்துவமனைகளை நாடியுள்ளார் தினேஷ். 
இதற்கு சிகிச்சை அளிக்க முடியம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் மருத்துவமனைகள், அதற்கு செலவாகும் தொகையை கூறும்போது தான் சிக்கல் எழுந்துள்ளது. இரண்டு காதுகளிலும் அறுவை சிகிச்சை செய்ய 15 லட்ச ரூபாய் வரை செலவு ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்க, அதிர்ந்து போய் இருக்கிறார் கவினின் தந்தை தினேஷ். எவ்வளவு முயற்சித்தும் மருத்துவர்கள் கேட்கும் தொகையை செலுத்த முடியாமல் தவித்து வரும் தினேஷ் தற்போது, தமிழக அரசின் உதவியை நாடி இருக்கிறார். 
மற்ற குழந்தையை போல தங்களின் மகன் கவினும், கேட்கும் திறனைப் பெற அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், தங்கள் மகனின் படிப்பும், எதிர்காலமும் முதலமைச்சரின் கையில் இருப்பதாகவும், அரசு உடனடியாக தங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் அரிய வகை உடல் நலப்பாதிப்பால் தான்யா என்ற சிறுமிக்கு தமிழக முதலமைச்சர் அவர்களின் நேரடி பார்வைக்கு சென்று பிறகு அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்தும் முழு பூரண குணமடையும் வரை தமிழக முதல்வரின் கட்டுபாட்டுடன் சிகிச்சை பெற்றும் இல்லம் திரும்பிய சிறுமியின் வீட்டிற்கே நேரடியாக சென்ற முதல்வர் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. எனவே அரிய வகை பாதிப்பில் இருக்கும் சிறுவன் கவினுக்கும் தமிழக முதல்வர் உதவிட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com