தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டத்தில் ஓ.பி.எஸ் அணியா? எடப்பாடி அணியா? என, மேயர் கேட்டதால் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தஞ்சை மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க-வை சேர்ந்த 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கண்ணுக்கினியாள் ‘அவையில் பெண் உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதால் கண்ணியக் குறைவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க கொறடா மணிகண்டன் பேசும்போது, ‘மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அள்ள அவுட்சோர்சிங் முறையில் டெண்டர் விடப்படும் என்கிற தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினார்.
மேலும் அவர், ‘மேயரின் ஓராண்டு சாதனை என நாளிதழ்களில் வெளியான செய்தியை புத்தகமாக அச்சிட்டு மக்கள் வரி பணத்தை வீணடித்துள்ளீர்கள்’ என, குற்றம்சாட்டி பேசினார். அந்த நேரத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி இருந்த நிலையில் அ.தி.மு.க உறுப்பினர்களை பார்த்து மேயர், ‘நீங்கள் ஓ.பி.எஸ் அணியா? ஈ.பி.எஸ் அணியா?’ என கேட்டு கிண்டல் அடித்தார்.
இதனால் தி.மு.க., அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மன்ற கூட்டத்தில் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேயரை கண்டித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் மாமன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு சென்றனர்.