சேலத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்
சேலம் கோவிந்தா கவுண்டர் தோட்டம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சேலம் நான்கு ரோடு அருகே உள்ள கோவிந்தா கவுண்டர் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் உள்ளது.
இந்த நிலையில் கோவிந்தா கவுண்டர் தோட்டம் பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அறிந்த குடியிருப்புவாசிகள் தங்கள் பகுதியில் மதுபான கடை திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளித்துள்ளனர்.
இருப்பினும் ஓரிரு நாட்களில் புதிய மதுபான கடை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் ஓமலூர் பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கமாக ஓமலூர் பிரதான சாலையில் காலை முதல் இரவு வரை வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும்.
குறிப்பாக புறநகர் பகுதிகளில் இருந்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், சேலம் அரசு மருத்துவமனை முக்கிய வர்த்தக மையங்களுக்கு வருபவர்கள் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய முக்கிய சாலையாகும்.
நோயாளிகளை ஏற்றி வரக்கூடிய ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கும் இந்த சாலைதான் பிரதானமாக உள்ளது. எனவே இந்த சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகளும் பேருந்து பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாயினர். அவசர வேலைக்காக சென்றவர்கள் சாலை தடுப்புச் சுவர்களை தாண்டி மாற்று பாதையில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்காததால் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நீடித்தது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் பிறகே அப்பகுதி போக்குவரத்தில் இயல்பு நிலை திரும்பியது.