திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் - எப்போது கிடைக்கும்?

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் - எப்போது கிடைக்கும்?
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் - எப்போது கிடைக்கும்?

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் எப்போது வழங்கப்படும்? என்பது குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: 

கோடை விடுமுறையை முன்னிட்டு அளவுக்கு அதிகமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருவார்கள். எனவே ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை நடந்து மலை ஏறும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி மலையடிவாரத்தில் இருந்து நாள்தோறும் 10 ஆயிரம் டோக்கன்கள், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் 5 ஆயிரம் டோக்கன்கள் என திவ்ய தரிசனத்திற்காக ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் வழங்கப்படும்.

மேலும், ஏழுமலையானை தரிசிக்க சாதாரண பக்தர்களுக்கும் முன்னுரிமை அளிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே கோடை விடுமுறைக் காலத்தில் தகுதி வாய்ந்த பக்தர்களுக்கு மட்டுமே வி.ஐ.பி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். 

எனவே முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனத்துக்கு பரிந்துரை கடிதங்களை பக்தர்களிடம் கொடுத்து அனுப்பக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். தலா ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ரூ.500 கட்டணத்தில் வழங்கப்படும் ஸ்ரீவானி அறக்கட்டளை தரிசன டிக்கெட் எண்ணிக்கை மற்றும் பல்வேறு மாநில சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கு வழங்கப்படுகிற ரூ.300 தரிசன டிக்கெட் எண்ணிக்கை ஆகியவற்றை கோடைக்காலத்தில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி மலையில் 7,500 அறைகள் உள்ளன. இவற்றில் 40,000 பக்தர்கள் வரையில் தங்க முடியும். மொத்தம் உள்ள அறைகளில் 85 சதவீதம் அறைகள் சாதாரண பக்தர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக உள்ளன. கோடைக் காலத்தில் அன்னதானக் கூடம் மற்றும் திருப்பதி மலையில் உள்ள 2 மற்றும் 4 ஆகிய மண்டபங்களிலுள்ள அன்னதான கூடங்கள், சாமி தரிசன வரிசை ஆகியவற்றில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். 

கோடைக் காலம் முழுவதும் திருப்பதி மலையில் உள்ள அனைத்து மொட்டை போடும் மண்டபங்களிலும் 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். பக்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் லட்டு பிரசாத விநியோகம் செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com