உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க முன்வர வேண்டும்
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டி.ஒய்.சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து, மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை திறந்து வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேசுகையில், 'தமிழகத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைக்க முயற்சி செய்து, அதற்கான கனவை நனவாக்கியவர் கருணாநிதி. அவரது முயற்சியால் உருவாக்கப்பட்டதுதான் இந்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
நீதிக்கான இந்த கட்டிடம் தற்போது தமிழகத்தில் கம்பீரமாக நிற்கிறது. நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகியுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்ற வேண்டும். அத்துடன், உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க முன்வர வேண்டும்' என்றார்.
விழாவில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி ஆர்.மகாதேவன், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டார் கலந்துகொண்டனர்.