'கச்சத்தீவில் புத்தர் சிலை' - மத்திய அரசை எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

'கச்சத்தீவில் புத்தர் சிலை' - மத்திய அரசை எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்
'கச்சத்தீவில் புத்தர் சிலை' - மத்திய அரசை எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

இந்தியா கொடையாக இலங்கைக்கு வழங்கிய கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்கள கடற்படை நிறுவி இருக்கிறது. இந்த விவகாரம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவால் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க ஏற்கனவே இந்திய மீனவர்களுக்கு சிக்கல்கள் உள்ள நிலையில் தற்போது அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனே அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள பதிவில், ‘இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். சிங்கள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் ஈழத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தமிழர்களும் பங்கேற்கின்றனர். இந்த திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது.

அப்படி இருக்கும்போது அங்கு புத்தர் சிலை அமைக்கப்பட்டு இருப்பது கச்சத்தீவை சிங்களமயமாக்கும் செயலாகும். புத்தர் கோயிலுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டால் அது, தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மத நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும்.

இவற்றை கடந்து புத்தர் சிலை வழிபாடு என்கிற பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை உளவுப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. இது, இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும்கூட அந்தோணியார் ஆலயத் திருவிழா, அடிப்படை வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு இந்தியாதான் உதவி செய்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com