சென்னை முட்டுக்காட்டில் 2 அடுக்கு மிதவை உணவகக் கப்பல் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் விதமாக மிதவை படகுகள், இயந்திர படகுகள், அதிவேக இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் கொச்சியை சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தனியார் மற்றும் பொதுபங்களிப்பு திட்டத்தின் மூலம் ரூ.5 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதக்கும் உணவகக் கப்பல் அமைக்கப்படுகிறது.
இதற்கான கட்டுமான பணிகளை தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் டாக்டர் சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மிதக்கும் உணவகக் கப்பலின் தரைத்தளம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்தவெளியாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் விதமாகவும் வடிவமைக்கப்படுகிறது.
இந்த கப்பலில் சமையலறை, சேமிப்பறை, கழிவறை மற்றும் இயந்திர அறைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த மிதக்கும் உணவகக் கப்பல் 60 ஹெச்.பி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் விதமாக வடிவமைக்கப்படுகிறது. இதன் நீளம் 125 அடி, அகலம் 25 அடி என்பது குறிப்பிடத்தக்கது.