கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமைக்குஞ்சுகள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளன.
கடலூர் கடற்கரைக்கு ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் முட்டையிடுவதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அதிகளவில் வந்து செல்லும். இவ்வாறு வரும்போது கடற்கரையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடுவதால் பெரும்பாலான ஆமைகள் மீண்டும் கடலுக்குள் திரும்பாமல் உயிரிழந்து போவதுண்டு.
அதையும் தாண்டி கடற்கரையோரங்களில் ஆமைகள் இடும் முட்டைகளை காகம், நாய்கள் உள்ளிட்டவை சாப்பிட்டுவிடுகின்றன. இதை தடுக்கும் வகையில் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் ஆண்டுதோறும் சேகரித்து அவற்றை பொரிப்பகத்தில் வைத்து குஞ்சு பொரித்தவுடன் கடலில் விட்டு வருகின்றனர்.
இதற்காக தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் பொரிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையோரம் ஏராளமான ஆலிவ் ரெட்லி வகை ஆமைக்குஞ்சுகள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளன.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே நேரத்தில் இவ்வளவு ஆமை குஞ்சுகள் எப்படி உயிரிழந்தது? வனத்துறையினர் முறையாக ஆமைக்குஞ்சுகளை வைத்து பொரிப்பகத்தில் பாதுகாக்கவில்லையா? என ஒருவருக்கொருவர் ஆச்சரியமாக கேட்டுக்கொண்டனர்.
அதே சமயம் அதிகாலையில் பொரிக்கும் ஆமைக்குஞ்சுகள் கடலை நோக்கி செல்ல முயலும்போது பொரிப்பகத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுவற்றில் மோதி இறந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பொரிப்பகத்தில் பாதுகாத்த ஆமை குஞ்சுகளை நாய்கள் தூக்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
எனவே இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொரிப்பகத்தில் ஆமைக்குஞ்சுகளை முறையாக பாதுகாக்க வேண்டும் என கடலூர் மாவட்ட தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.