சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே தனியார் அரிசி ஆலையில் மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் புதுவயல் மற்றும் சாக்கோட்டை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள அரிசி ஆலைகளில் ஏராளமான வடநாட்டு இளைஞர்கள் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சாக்கோட்டையில் இருந்து மணமேல்குடி செல்லும் சாலையில் உள்ள தனியார் ஆலையில் அரிசியை பேக்கிங் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
இயந்திரத்தில் இருந்து அரைக்கப்பட்டு வந்த அரிசியை தொழிலாளர்கள் பேக்கிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இயந்திரத்தின் மேல்கூம்பு உடைந்து அரிசி மளமளவென சரிந்ததில் பீகாரை சேர்ந்த குந்தன்குமார், சிவகங்கை மாவட்டம் கண்டனூரை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் அரிசி குவியலுக்குள் சிக்கி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதைப் பார்த்து அருகில் இருந்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அரிசி குவியலில் சிக்கி இருந்த இருவரது உடலையும் மீட்டனர். பின்னர், இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.