பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது என்ன?

பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது என்ன?
பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது என்ன?

தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதாதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 2 ஆவது நாள் விவாதம் இன்று சட்டப்பேரவையில் தொடங்கியது. அப்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வராதது குறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

50,000 மாணவர்கள் ஆப்சென்ட் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தி.மு.க மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

‘இதுவரை இல்லாத அளவுக்கு 50,000 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதவில்லை. இதற்கு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என சி.பி.எம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் வலியுறுத்தினர். 

இதுதொடர்பாக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பேசும்போது, ‘பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தனை பேர் ஏன் தேர்வு எழுதவில்லை? என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

கடந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என அரசு சொல்லும் நிலையில் இந்த ஆண்டு 50,000 பேர் தேர்வு எழுதவில்லை என்று சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, தமிழக அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

இந்த தீர்மானத்துக்கு பதிலளித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் பேசியதாவது: 

கொரோனா நோய் பரவலுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பள்ளிக் கல்வித் துறை மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன உடனே மாணவர்களை கண்டறிந்து ஜூலை மாதத்தில் துணைத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற கல்வியாண்டில் குறைந்தபட்ச வருகைப்பதிவேடு 75% இருக்க வேண்டும் என்பதை பின்பற்ற மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வாரத்தில் 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இனிமேல் கண்காணிக்கப்படுவார்கள். இடையில் நின்ற 78,000 பேரை தொடர்ந்து கண்காணித்து தேர்வு எழுத வைத்துள்ளோம். பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஏன் இவ்வளவு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வரவில்லை? என முதலமைச்சர் தொலைபேசி மூலம் என்னிடம் கேட்டார். 

பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும் இடைநின்ற மாணவர்கள் மீது தமிழக அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் பேசினார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com