ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ போலீசில் புகார் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நடந்த மோதல் எதிரொலியாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ போலீசில் புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவை வரவேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, ம.தி.மு.க சதன் திருமலைகுமார், சி.பி.ஐ மாரிமுத்து, சி.பி.எம் நாகை மாலி, வி.சி.க ஆளூர் ஷாநவாஸ், பா.ஜ.க நயினார் நாகேந்திரன் பா.ம.க ஜி.கே.மணி, காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, அ.தி.மு.க தளவாய் சுந்தரம் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் பேசினர்.
கடைசியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச அனுமதி கேட்ட நிலையில் அவருக்கு சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ் பேசுகையில் ‘முதல்வர் கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இந்த மன்றம் விவாதம் இன்றி ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என பதிவு செய்தேன்.
ஆனால் இங்கே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று இருக்கிறது. இருப்பினும் நம்முடைய முதல்வர் கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அ.தி.மு.க சார்பில் முழுமையாக நான் வரவேற்கிறேன்’ என கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியை சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி ‘கட்சிக்கு ஒருவர் வீதம் நீங்கள் பேச அழைத்தீர்கள். அ.தி.மு.க என்பது என்னுடைய அணியை சார்ந்துதான். நான்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன்.
அப்படி இருக்கும்போது எங்களுடைய தரப்பில் இருந்து தளவாய் சுந்தரம் பேசினார். அதற்கு பிறகு மறுபடியும் பேச அனுமதித்துள்ளீர்கள். எங்களுடைய கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை எப்படி நீங்கள் பேச அனுமதிக்கலாம்? என்று ஆவேசமாக பேசினார்.
அப்போது, ஓ.பி.எஸ் கூலாக சிரித்துக் கொண்டு இருந்தார். தொடர்ந்து ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ ‘அ.தி.மு.க-வின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்’ என்று ஆவேசமாக பேசினார்.
அவருக்கு ஆதரவாக ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ-க்கள் கோஷம் எழுப்பினர். இதற்கிடையே எடப்பாடி அணி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ரவி கோவிந்தராஜ், அருண்குமார் ஆகியோருக்கும் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது இருக்கையில் இருந்து எழுந்த மனோஜ் பாண்டியன் தனது வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு எடப்பாடி எம்.எல்.ஏ-க்களை நோக்கி சென்றார். உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் அவருடைய கையைப் பிடித்து இழுத்து தடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத்தால் சட்டப்பேரவையில் சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
ஆனாலும் சபாநாயகர் அப்பாவு விளக்கத்தை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது அணி எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு சட்டப்பேரவை அமைதியானது. இதன் பிறகு முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் நடந்த மோதல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ ரவி கோவிந்தராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.