குடிநீரில் அசுத்தம் கலந்த விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் அசுத்தம் கலந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அப்பகுதி மக்களுக்கு மாற்றுத் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் ‘புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. இந்த விவகாரத்தை சி.பி.ஐ அல்லது ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
மேலும் இந்த சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.