தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 7 பேராக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம், அருகே உள்ளது குருவிமலை. இங்கே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏராளமான பேர் வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இந்த வெடி சத்தம் அந்த பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைக்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களை 108 ஆம்புலனஸ் மூலமும், ஷேர் ஆட்டோ மூலமும் காஞ்சிபுரத்தில் உள்ள அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிபட்ட 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் மூவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெடி விபத்து நடந்த பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் விரைந்து சென்று மீட்பு பணியை பார்வையிட்டு வருகின்றனர். மேலும், வெடி விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.