பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்
கோவை மாவட்டம் வால்பாறையில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணியால், பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் திடீரென இறங்கியது. இதில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வால்பாறையை சுற்றிலும் 62 க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளுக்கு வால்பாறையில் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பல்வேறு எஸ்டேட் சாலைகள் குண்டும்குழியுமாக வாகனங்கள் இயக்க முடியாமல் இருந்தது. நகராட்சி சார்பாக பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் நீண்டநாள் கோரிக்கையான தாய்முடி எஸ்டேட் பகுதியில் இருந்து பன்னிமேடு எஸ்டேட் பகுதி வரை 16 கிலோ மீட்டர் வரை 16 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது பன்னிமேடு பகுதியிலிருந்து முடீஸ் தெப்பக்குளம் பகுதி வரை சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. மீதி முடீஷ் பகுதியில் இருந்து சோலையார் பகுதி வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை சீரமைக்கப்படாமல் பாதியில் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வால்பாறையில் இருந்து ஹைஃபாரஸ்ட் எஸ்டேட் பகுதிக்கு சென்ற பேருந்து முடீஸ் பகுதியில் எதிரே வந்த பேருந்துக்கு வழிவிடும்போது சாலையிலிருந்து பள்ளத்தில் இறங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், கிரேன் மூலமாக பேருந்தை மீட்டனர். பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு காயங்கள் ஏற்படாமல் உயிர் தப்பினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.