பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்ததை தொடர்ந்து சென்னை பள்ளிக்கரணை பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை அடுத்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராணி.
இவர், விபத்து தொடர்பான விசாரணைக்கு வரும் மக்களிடம் அதிக லஞ்சம் வசூலிப்பதாகவும், விபத்து இழப்பீடு வழக்குகளை தனக்கு தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் நடத்தி இழப்பீடு தொகைகளில் கமிஷன் பெற்று வந்ததாகவும் புகார்கள் வந்தன.
இதுகுறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் ஜேம்ஸ் தங்கையா விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், பெண் இன்ஸ்பெக்டர் ராணி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டர் ராணியை பணியிடை நீக்கம் செய்து கடந்த ஆகஸ்டு மாதம் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தாம்பரம் ஆணையரக கூடுதல் கமிஷனர் காமினி கடந்த 7 மாதங்களாக விசாரணை மேற்கொண்டதில் இன்ஸ்பெக்டர் ராணி முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாக தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதையடுத்து பெண் இன்ஸ்பெக்டர் ராணியை பணி நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இந்த விவகாரம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.