உலக தண்ணீர் தினம் - கிராம சபைக் கூட்டத்தில் என்ன விவாதம் நடக்கும்?

உலக தண்ணீர் தினம் - கிராம சபைக் கூட்டத்தில் என்ன விவாதம் நடக்கும்?
உலக தண்ணீர் தினம் - கிராம சபைக்  கூட்டத்தில் என்ன விவாதம் நடக்கும்?

உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது

உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக குடிநீர் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் கிராம சபை கூட்டங்களின் எண்ணிக்கை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. 

இந்த ஆண்டு முதன் முறையாக மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் அன்று நடக்க உள்ள கிராம சபை கூட்டத்திற்கான இடம், நேரம் கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. 

இந்த கிராம சபை கூட்டத்தில் ஒவ்வொருவரும் நீரை பாதுகாத்தல், பயன்பாட்டை குறைத்தல் மற்றும் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரித்தல் என்ற விழிப்புணர்வுடன் கலந்து கொள்ள வேண்டும். 

மேலும் புதிய குடிநீர் ஆதாரத்தை உருவாக்குதல், நீர் நிலைகளை புனரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்றவற்றுக்கு ஏதுவாக நீர் நிலைகளை கணக்கெடுக்க வேண்டும். 

மேலும் அதற்கான திட்டங்களை தீட்டுதல், சமூக காடுகள் வளர்த்தல் மற்றும் பல்வேறு திட்ட செயல்பாடுகள் தொடர்பான விவாதங்கள் இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நடைபெற வேண்டும். 

மேலும் ஜல்ஜீவன் இயக்கம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குதல், அதற்கான மக்கள் பங்கேற்புத்தொகை செலுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். 

தற்போது 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் சிறுதானிய விவசாயம், குறைவான நீரில் கூடுதல் விளைச்சல், சிறுதானியத்தை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவாதிக்க வேண்டும். 

 அத்துடன் கிராம சபையில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை,  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கலந்து கொண்ட அலுவலர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

எனவே மார்ச் 22 (இன்று) நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு விவாதத்தில் பங்குபெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com