அதிவேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில்கள்
தமிழகத்தின் இரண்டாவது வந்தே பாரத் ரயிலை வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி பாரதப் பிரதமர் மோடி துவங்கிவைக்க உள்ளார்.
இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே அதிவேகத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்தது.
அதன்படி, முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனால், வந்தே பாரத் ரயில்களை சென்னை ஐசிஎஃப் மட்டுமல்லாது, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் பஞ்சாப் மாநிலம் கபுர்தலா ஆகிய இடங்களில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதனையடுத்து, சென்னை ஐசிஎஃப்-ல் 2-வது கட்டமாக ரூ.25.50 கோடி மதிப்பில் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் இரண்டாவது வந்தே பாரத் ரயில், சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே இயக்கப்படுகிறது.
இதற்காக வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி பாரதப் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்றும், அவ்வாறு வரும் அவர் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவங்கிவைக்க உள்ளார்.
அதேபோல, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி வழித்தடத்தில் இரண்டு ஜோடி ரயில்களை, மூன்று வாரங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் வகையிலும், தாம்பரம் - செங்கோட்டை ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் வந்தே பாரத் ரயில் புதுடெல்லியில் இருந்து வாரணாசிக்கு 2019 பிப்ரவரி 15-ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.
அதேபோல, தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில், சென்னை - மைசூரு இடையே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.