வேளாண் பட்ஜெட்: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்ன?

வேளாண் பட்ஜெட்: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்ன?
வேளாண் பட்ஜெட்: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்ன?

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் உள்ள மேலும் பல முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

*  பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

*  தக்காளி ஆண்டு முழுவதும் கிடைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*  பசுமைக்குடில், நிழல் வலை குடில் அமைத்து உயர்மதிப்புள்ள காய்கறிகள், பூக்கள் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும். இத்தகைய பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையைப் பரவலாக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

* ராமநாதபுரத்தில் மல்லிகை செடிகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்யவும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்று தரவும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*  முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 ஹெக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 ஹெக்டரில் நடவு செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

 *  அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.5 லட்சம் பணமும், பாராட்டு பத்திரமும் குடியரசு தினம் அன்று வழங்கப்படும்.

*  விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், வாடகை மையங்கள் உள்ளிட்டவைக்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

*  பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் காவேரி, வெண்ணாறு பகுதிகளில் வாய்க்கால்களை தூர் வாருவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  

*  அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

*  27 சேமிப்பு கிடங்குகளில் ரூ.54 கோடியில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதிக வரத்துள்ள 100 விற்பனை கூடங்களில் ரூ.50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிக்கப்படும்.

*  150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிப்பு கிடங்குகள், 25 குளிர்பதன கிடங்குகளில் மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது முறை அமல்படுத்தப்படும். 

*  பூச்சிகள் தொடர்பான புரிதலை அதிகரிக்க கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

* வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*  சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.100, பொதுரகம் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.75 அதிகமாக வழங்கப்படும். அதேப்போல், 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

*  அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

* கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

* சந்தனம், தேக்கு, செம்மரம் உள்ளிட்ட மதிப்புள்ள மரங்கள் நன்கு வளர்ந்து பலன் தரும்போது வெட்டுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க வனத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

*  கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

*  காவிரி டெல்டா விவசாயிகளுக்காக உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் தொடங்க ஊக்குவிக்கப்படுவார்கள். புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். தஞ்சாவூரில் புதிய வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்படும்.

* காவிரி டெல்டா பகுதியில் திருச்சி-நாகை இடையே வேளாண் தொழில் பெருந்தடம் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*  ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மிளகாய் மண்டலம் உருவாக்கப்படும். 

*  தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஹெக்டேரில் சாகுபடியை உயர்த்த ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.  

*  ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நுண்ணீர் பாசன கட்டமைப்பு கீழ்பவானி பாசன பரப்பில் ஒருங்கிணைந்த நுண்ணீர் பாசன கட்டமைப்புகளை 960 ஹெக்டேரில் உருவாக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இது போன்று மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com