குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிறுதானியப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் முதல்கட்டமாக நீலகிரி, தருமபுரி மாவட்டங்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் அவர் கூறியிருப்பதாவது:
சிறுதானியப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இரண்டு கிலோ கேழ்வரகு நீலகிரி, தருமபுரி மாவட்டங்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்திட கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட சிந்தாமணி, காமதேனு கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப்பயிர் சாகுபடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிப்பதற்கும், 12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும்.
சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்கப்படும்.
மக்களிடையே சிறுதானியங்களின் அதிகரிக்கும் வகையில், போதிய பயன்பாட்டை ஏற்படுத்துவதற்கு "சிறுதானிய விழிப்புணர்வை திருவிழாக்களும் இவ்வியக்கத்தின் மூலம் நடத்தப்படும். இவ்வாறு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.