ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு விலையில்லா பம்ப் செட்டுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளின் விளைநிலங்களில் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் இலவசமாக நிறுவப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் அவர் கூறியிருப்பதாவது:
300 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளின் வயல்களில், ஆழ்துளைக்கிணறுகள் அமைத்து, அதில் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகளும் இலவசமாக நிறுவப்பட்டு, அதில் சொட்டு நீர் பாசன வசதியும் மானியத்தில் அமைத்துத் தரப்படும்.
ஊரக வளர்ச்சி- உள்ளாட்சித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசனக் குளங்கள், ஊருணிகள், வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி, பாசன நீர் கடைமடை வரை செல்வதற்கு வழிவகை செய்யப்படும்.
கிராமப் பஞ்சாயத்துகளில் விளைபொருட்களை உலர வைத்து சேமிப்பதற்கு வசதியாக 250 உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் கட்டித் தரப்படும்.
கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட 2 சிறு தானிய மண்டலங்களுடன் உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, மாவட்டங்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும். இவ்வாறு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் கூறி உள்ளார்.