தென்னங்கன்றுகள் இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 கன்றுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2,504 பஞ்சாயத்துக்களில் தென்னை மரங்கள் இல்லாத 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் மொத்தம் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதில் அவர் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு அடையவும், தண்ணீர் மற்றும் மண்ணின் வளத்திற்கு ஏற்ப வேளாண்மை முழுமையாக வளர்வதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக 2,504 கிராம ஊராட்சிகளில் 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
10 ஏக்கர் தரிசாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின் இணைப்பு அல்லது சூரிய சக்தி பம்ப்செட்டுகள் இலவசமாக அமைத்து தரப்படும்.
மின் இணைப்பு கிடைத்தவுடன் மா, கொய்யா, நெல்லி போன்ற பலன் தரக்கூடிய பழமரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு அதில் சொட்டு நீர்ப் பாசன வசதியும் மானியத்தில் நிறுவப்படும்.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் தென்னை மரங்கள் இல்லாத 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் மொத்தம் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக 2,504 பஞ்சாயத்துகளில் வழங்கப்படும்.
விவசாயிகளின் வயல்களில் 600 பண்ணைக் குட்டைகள் அமைத்து, கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்யப்படும்.
மேலும் இப்பண்ணைக் குட்டைகளில் மீன்வளத்துறை மூலமாக மீன் குஞ்சுகள் வளர்த்து, கூடுதல் வருமானம் ஈட்டிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் கூறி உள்ளார்.