திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் தோல் கழிவுகளை பாலாற்றில் கலப்பதால் தண்ணீர் மாசு அடைந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது.
இந்த நிலையில் கனமழையை பயன்படுத்தி வாணியம்பாடியை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகள் தங்களது தோல் கழிவுகளை பாலாற்றில் திறந்து விட்டுள்ளனர்.
இதனால் மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு பாலத்தின் மேல்மட்டம் வரை நுரை பொங்கி தூர்நாற்றத்துடன் பாலாறு ஓடுகிறது.
இதனால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பாலாற்றில் சட்டவிரோதமாக மறுசுழற்சி செய்யாமல் தோல் கழிவுகளை பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலைகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்பட்டு, தொழிற்சாலைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் கலெக்டரின் உத்தரவை மீறியும், அலட்சியபடுத்தும் வகையிலும் மீண்டும் மீண்டும் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலை நிர்வாகம் கனமழையை பயன்படுத்தி தோல் கழிவுகளை பாலாற்றில் திறந்து விட்டுள்ளனர்.
இதனால் பாலாறு முற்றிலும் மாசு அடைந்து வரும் நிலையில் பாலாற்றை நம்பி இருக்கும் விவசாய நிலங்களில் நிலத்தடி நீரும் மாசு அடைந்து பொதுமக்களுக்கு பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கி வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் பாலாற்றில் தோல் கழிவுகளை கலக்கும் தோல் தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் ஒருமித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.