திருச்சியில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் தி.மு.க நிர்வாகிகள் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கன்டோன்மென்ட் ஸ்டேட் ஆபிசர்ஸ் காலனியில் தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி வீடு உள்ளது.
இந்த பகுதியில் திருச்சி மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் செலவில் நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு, பதாகைகளில் அதே பகுதியில் வசிக்கும் எம்.பி திருச்சி சிவா பெயர், படம் இடம்பெறவில்லை. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்க அமைச்சர் கே.என்.நேரு, மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் வந்தபோது திருச்சி சிவா ஆதரவாளர்கள் திடீரென கருப்புக் கொடியை காட்டி அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா எம்.பி வீட்டுக்கு வந்ததாகவும், பின்னர் அங்கிருந்த பொருட்களை உடைத்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதலை தொடர்ந்து புகார் அளிக்க சென்ற சிவா எம்.பி ஆதரவாளர்களை காவல் நிலையத்தில் புகுந்து அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான காஜமலை விஜி, முத்துச்செல்வம், ராமதாஸ், துரைராஜ் மற்றும் திருப்பதி ஆகிய 5 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த மோதல் மற்றும் கைது சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரும் தி.மு.க-வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே தி.மு.க நிர்வாகிகள் 5 பேரும் ஜாமீன் கேட்டு திருச்சி 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி பாலாஜி 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.