தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது வரும் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் அடுத்த மாதம் 21ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்தவகையில் 3வது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இயற்கை வேளாண்மை, உழவர் சந்தைகளை மேம்படுத்துவது, சிறுதானிய பயிர்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டு நெல், கரும்பு, சோளம் உள்பட, வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படலாம் என்றும் விவசாயிகள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.