புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டு முன்பு போராட்டம் - நியாய விலைக்கடை ஊழியர்கள் குடும்பத்துடன் கைது

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டு முன்பு போராட்டம் - நியாய விலைக்கடை ஊழியர்கள் குடும்பத்துடன் கைது
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டு முன்பு போராட்டம் - நியாய விலைக்கடை ஊழியர்கள் குடும்பத்துடன் கைது

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டு முன்பு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட நியாய விலைக்கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 336 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பல ரேஷன் கடைகள் மூடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

இதையடுத்து நியாய விலைக்கடைகளை மீண்டும் திறக்கக் கோரியும், நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரியும் நியாய விலைக்கடை ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ரேஷன் கடை ஊழியர்கள் இன்று தங்களது குடும்பத்துடன் கதிர்காமத்தில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு திடீரென வந்து வாசல் முன்பாக அமர்ந்தனர். இதன் பின்னர் அவர்கள் தங்களது கோரிக்களை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனை அறிந்த முதல்வர் ரங்கசாமி போராட்டக்காரர்களை சந்தித்து கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதை விளக்கி கூறினார். அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஊழியர்கள், ‘இரு ஆண்டுகளாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஊதியமும் இல்லை. எனவே போராட்டத்தை கைவிட முடியாது’ என கூறினர்.

இதையடுத்து முதல்வர் ரங்கசாமி வீட்டுக்குள் சென்றுவிட்டார். முதல்வர் வீட்டின் முன்பாக நியாய விலைக்கடை ஊழியர்கள் குடும்பத்துடன் அமர்ந்ததை அறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். 

ஆனால் நியாய விலைக்கடை ஊழியர்களோ ஜிப்மர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  ஊழியர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

தகவல் அறிந்த திமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் காவல் நிலையம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் நியாய விலைக்கடை ஊழியர்கள் குடும்பத்தினருடன் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com