பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் கண்காட்சியில் மூதாட்டி - இன்ப அதிர்ச்சி தந்த கலெக்டர்!

தஞ்சாவூர் மாவட்டம் நெகிழி இல்லா மாவட்டமாக உருவாக மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து விழிப்புணர்வு பேரணி, தானியங்கி மஞ்சப்பை வழங்கும் கருவி, பள்ளி மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் மற்றும் மாரத்தான் ஆகிய பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.
இதைப் போல் தஞ்சாவூரில் உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் நெகிழி இல்லா பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் நெகிழிக்கான மாற்று பொருள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று தொடங்கி வைத்து அவற்றைப் பார்வையிட்டார்.
இன்று ஒருநாள் மட்டும் நடக்கும் இந்த கண்காட்சி அரங்கில் நெகிழி மாற்றுப் பொருட்களான காகித பொருட்கள், பனை ஓலை பொருட்கள், சணல் பொருட்கள், தென்னை நார் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
அதேப்போல் வாழை நார் பொருட்கள், களிமண் பொருட்கள், துணி பொருட்கள், விவசாய, மூங்கில் பொருட்கள், மக்கும் பொருட்கள், துணி விளம்பர பதாகை பொருட்கள் ஆகியவை அரங்கில் இடம் பெற்று பெற்றுள்ளன.
இந்த கண்காட்சி அரங்கில் கல்யாணி (75) என்ற வயதான மூதாட்டி தனது தொழிலான மூங்கில் கூடை பின்னுதல், மூங்கில் தட்டு, முறம் ஆகியவற்றை கண்காட்சியில் வைத்திருந்தார்.
இவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டபோது மூதாட்டி வைத்திருந்த அனைத்து பொருட்களையும் தான் வாங்குவதாக தெரிவித்தார்.
இதன் மூலம் அந்த பாட்டிக்கு உடனடியாக ரூபாய் 2000 கிடைத்தது. இதனால் பாட்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
கலெக்டர் உத்தரவுப்படி 75 வயதான அந்த பாட்டியை அவரது வீட்டில் அலுவலர்கள் ஜீப்பில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தனர். இது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரவிச்சந்திரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இண்டாக் கௌரவ செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருவதால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அரங்கு பெரிய கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை