தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு கணிசமாக உயர்ந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 843 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையில் இந்தியாவின் தினசரி நோய் பாதிப்பு எண்ணிக்கை 800ஐ தாண்டியது இதுவே முதல் முறை. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,389. என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கும் மாநிலங்களான தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகியவை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதி இருந்தது.
கொரோனா உருமாறிய தொற்று தீவிரமாக பரவுவது தான் திடீர் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் நாட்டில் இன்ஃப்ளுயன்சா எச்3என்2 வைரஸ் அதிகம் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் மற்றும் ஐஎம்ஏ அமைப்புகள் போதிய வழிகாட்டுதல் மற்றும் எச்சரிக்கையை அளித்து இருந்தது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் நேற்றைய நிலவரப்படி 304 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் ஆண்கள் 48 பேர், பெண்கள் 16 பேர் ஆவார்கள். சிகிச்சை குணம் அடைந்து 39 பேர் வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இன்றைய நிலவரப்படி மொத்தம் 329 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை மொத்தம் 35 லட்சத்து 95 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இதுவரை உயிரிந்தோர் எண்ணிக்கை 38,050 என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.