ஒன்றரை கிலோ தங்கத்துக்காக ஓராண்டு பிளான் - காரைக்குடியில் சிக்கிய கும்பல்

நகைக்கடை முகவரை போலீஸ் உடையில் கடத்திய ஊர்காவல் படையை சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நகைக் கடைகளுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் பழைய நகைகளை புதுப்பித்து கொடுக்கும் முகவராக உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 11ம் தேதி சென்னையில் இருந்து ஆம்னி பேருந்தில் ரவிச்சந்திரன் காரைக்குடி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது போலீஸ் சீருடையில் வந்த மர்ம கும்பல், ரவிச்சந்திரனை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 1.471 கிலோ தங்கம், 1.9 கிலோ வெள்ளி, 2.01 கோடி பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்ட அந்த கும்பல், ரவிச்சந்திரனின் கை, கால்களை கட்டி திருமயத்தில் இறக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க காரைக்குடி ஏ.எஸ்.பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சென்னை மற்றும் காரைக்குடி பகுதிக்குச் சென்ற தனிப்படையினர், அங்கு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த சி.சி.டி.வி. காட்சிகளைச் சேகரித்து தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், அந்த கும்பல் போலியான பதிவெண் கொண்ட காரில் வந்தது தெரிய வந்தது. காரின் உரிமையாளரை பிடித்து விசாரித்தபோது சென்னையைச் சேர்ந்த நாகேந்திரன் என்பதும் இவர் ஊர்காவல் படையில் கமாண்டராக பணியாற்றி தற்போது சஸ்பெண்ட்டில் உள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து நாகேந்திரனை சுற்றிவளைத்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ஊர்காவல் படையில் பணியாற்றி சஸ்பெண்ட் ஆன சதீஷ்குமார் , சாமுவேல் மற்றும் பெருமாள், சரவணன், பால்ராஜ், விஜயகுமார் ஆகியோர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 2 கோடி ரொக்கம், 1.471 கிலோ தங்க நகைகள்,1.900 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.துரை, "நகைக்கடை முகவரை போலீஸ் உடையில் சென்று கடத்தி துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கடந்த ஒரு வருடமாக இதற்காக திட்டமிட்டுவந்துள்ளனர். சென்னையில் ரவிசந்திரன் சென்று வரும் இடங்கள், காரைக்குடியில் அவர் வந்து இறங்கிய இடம் என அனைத்தையும் நோட்டமிட்டுள்ளனர். இதற்காக, 9 முறை சென்னையில் இருந்து காரைக்குடிக்கு வந்து அவரை பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வேறு ஏதும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றோம்" என்றார்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை