எடப்பாடி பழனிசாமி அணியினரிடம் இச்சம்பவம் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவினர் கொந்தளிப்பில் உள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தஞ்சாவூரில் வெள்ளி அன்று அதிமுக சார்பில் தஞ்சாவூர் சட்டமன்றத்தொகுதி, தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் என்ற பெயரில், முன்னாள் முதல்வர்கள் அண்ணா,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படம் மற்றும் இபிஎஸ்( கேலிச்சித்திரம் படம்) ஆகியவற்றை அச்சிட்டு, கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் அந்த போஸ்டரில், அஇஅதிமுகவை எட்டு முறை தோல்வி பெறச் செய்த எடப்பாடியை கண்டிக்கிறோம், வெளியேறு, வெளியேறு, கட்சியை விட்டு வெளியேறு, சமத்துவ பேரியக்கத்தை, சமுதாய இயக்கமாக மாற்றிய எடப்பாடியே வெளியேறு என்ற வாசகங்களை அச்சிட்டு, நகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இச்சம்பவம் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினரிடம் கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் உண்டாக்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஓபிஎஸ் அணி ஆதரவாளருமான வைத்திலிங்கம், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.